Monday, May 30, 2011

மற்றவை-விமர்சனம்

   ***எத்தன் - விமர்சனம்***
 



விமல், ஊரெல்லாம் பார்ப்பவர்களிடம் பணம் கடன் வாங்கி புதிது புதிதாய் தொழில் ஆரம்பித்து அத்தனையிலும் நஷ்டத்தை சந்திக்கிறார்.அதன் பின்பும் தன் சாமர்த்தியர்த்தால் மேலும் மேலும் கடன் வாங்கிக் கொண்டு இருக்கிறார். விமலின் அப்பா ஜெயப்பிரகாஷ் ஒரு நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி ஆசிரியர். கடன் வாங்கினால் அது தன் மகனின் எதிர் கால வாழ்க்கைக்கு சுமையாகி விடும் என்று எண்ணி, வாழ்க்கையில் கடனே வாங்காமல் நல்ல முறையில் குடும்பம் நடத்துகிறார். அவரது மனைவி பிரகதி, மகன் மேல் பாசமும், புருஷன் மேல் அக்கறையும் கொண்ட குடும்பத் தலைவி.

சனுஷா, கல்லூரியில் படிக்கும் பெண். அப்பாவை இழந்தவர். தன் அம்மாவுடன் வசிக்கிறார்.

சனுஷாவின் மாமன் சிறு வயதிலேர்ந்து சின்ன சின்ன திருட்டுக்கள் செய்பவர். அதனால் போலிஸில் அகப்பட்டு சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் சேர்த்த்ப் படுகிறார். அதன் பின்பு பெரியவனாகி, கார் திருடும் தொழிலும் , அடகு வியாபாரமும் போலிஸ் எஸ்.ஐ துணையுடன் செய்து வருகிறார்.
 
 
 

அவருக்கு சனுஷாவின் மீது ஒரு கண். சனுஷாவை தனக்கு கல்யாணம் செய்து வைக்க மறுக்கும் சனுஷா அப்பா சந்தானபாரதியை கீழே தள்ளி கொன்று விடும் அளவுக்கு சனுஷாவின் மீது ஒரு வெறி. அதனால் சனுஷாவையும், அவரது அம்மாவயும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறார்.

சனுஷாவின் மாமன் போட்ட செயினை ஒரு கட்டத்தில் சனுஷா தொலைத்து விட, விமல் அதை எடுத்து, தன் நண்பனின் தந்தையைக் காப்பாற்ற ,  சனுஷாவின் மாமனிடமே, தன் காதலியின் செயின் என்று பொய் சொல்லி அடகு வைக்கிறார். அதனால் விமல், சனுஷாவின் மாமனிடம் மாட்டிக் கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் விமலை, கடன் கொடுத்தவர்கள் அனைவரும் விரட்ட, அவர்களிடம் மாட்டாமல் ஒளிந்து கொண்டு இருக்கிறார். இச்சமயத்தில் சனுஷா மாமன், அவரைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். அது பிடிக்காமல் மாமனின் காவலில் இருந்து தப்பிக்க சனுஷா நினைக்கிறார். அவருக்கு விமல் உதவி செய்யப் போக, வில்லன் கூட்டம் இருவரையும் பிடிக்கத் துரத்துகிறது.

கடன்காரர்களிடம் விமல் மாட்டிக் கொண்டாரா? வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்தாரா? சனுஷாவுக்கும், அவரது மாமனுக்கும் திருமணம் நடந்ததா?
விடையை வெண்திரையைக் காண்க...!

களவாணியில் செய்த அதே வகை கேரக்டர் விமலுக்கு, அசால்டாக, அதே நேரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். பணம் கடன் வாங்க அவர் செய்யும்
மிமிக்ரிகள், சேட்டைகள், சாமர்த்தியங்கள் அடடா...சூப்பர். அவரது வாய்ஸ் நன்றாக கைகொடுக்கிறது. சிங்கம் புலியிடம் மாட்டிக் கொள்ளும் விமல், அவரிடம் தப்பிக்க முயலுவதற்கு செய்யும் செயல்கள் நல்ல காமெடி. படம் முழுவதும் காமெடியை தூவிக் கொண்டே போகிறார். முக்கியமாக சனுஷாவை ஏமாற்ற அவர் செய்யும் சேட்டைகள் அருமை.

சில சமயங்களில் அவர் செய்யும் விஜயகாந்த், ரஜினி மிமிக்ரி சேட்டைகள் ரசிக்கும் படி இல்லை.
 
 
அழகான முகம். சின்ன பெண் போன்ற தோற்றம். போதுமான நடிப்பு என சனுஷா நன்றாக தன் பணியைச் செய்திருக்கிறார். படத்தில் நிறைய இடங்களில்  அவருக்கு குளோசப் சீன் (Close-up) வைத்திருக்கிறார் இயக்குனர். குளோசப்பில் சனுஷாவின் முகமும், இதழும் ,பார்த்துக் கொண்டே இருக்கச் சொல்கிறது. அவ்வளவு இதம். ரேணி குண்டாவை விட, இந்தப் படத்தில் கொஞ்சம் சதை போட்டிருக்கிறார். குறைத்தால் நன்றாக இருக்கும்.

ஜெயப்பிரகாஷ்-ஷின் நடிப்பு பிரமாதம். மகனின் நிலையை எண்ணி அவர் கலங்குவதும், அதற்கு பின் அவர் எடுக்கும் முடிவும், மிக நன்று.

வில்லனாக சர்வஜித், சில இடங்களில் ஓ.கே. படம் முழுவதும் அதட்டுகிறார். மிரட்டுகிறார். சனுஷா தன்னை விரும்ப வேண்டும் என்பதற்காக அவர்
மயில்சாமி உதவியுடன் வசியம் பண்ண சாமியாரை நாடுவதும், அதன் பின்பு , மறு நாள் சனுஷா தன்னை ஆசையோடு மாமா என்று அழைக்கும் போது
வில்லன் காட்டும் எக்ஸ்பிரஷன் அருமை.

பிரகதி ஓ.கே. நிறைய இடங்களில், புருஷன் கோபப்படும் போதெல்லாம் தண்ணீர் கொடுக்கிறார்.

மயில் சாமி, மனோ பாலா சில இடங்களில் காமெடி செய்கின்றனர். சிறிது நேரமே வந்தாலும் போலிச் சாமியார் M.S.பாஸ்கர் நடிப்பு ரசிக்கும் படி உள்ளது.


    எத்தன் - காமெடிக்கு பஞ்சமில்லை.

*************************************************************









No comments:

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...