Sunday, November 18, 2012

எனது படைப்புகள் : ஜப்பானில் ஒரு இனிய பயணம் - 1


திவு எழுதி நிறைய மாதங்களாகி விட்டது.திரும்பவும் எழுத மனது நினைத்தாலும், முன்பு போல் நேரம் ஒதுக்க முடியவில்லை. ஆதலால் இனி வாரம் ஒருமுறை எழுதலாம் என்று எண்ணியுள்ளேன். நிறைய மாதங்களுக்குப் பிறகு பதிவு எழுதுவதால் எதைப் பற்றி எழுதுவது என்று நிறைய குழப்பம் வந்து விட்டது. ஜப்பானைப் பற்றியும், எனது ஜப்பான் பயணத்தைப் பற்றியும் எழுதினால் எனது வலைப்பூவின் தலைப்புக்கு ஏற்றவாறு இருக்குமே என்ற நினைப்பில், இந்த பதிவிலிருந்து ஜப்பான் பயணக்கட்டுரையை எழுத ஆரம்பித்துள்ளேன்...


ஜப்பான் நாட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகி விட்டது. நான் நினைத்ததை விட பயணம் ரொம்ப இனிமையாக இருந்தது. சென்ற வாரம் சனிக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு கேத்தே ஃபசிஃபிக் ஃபிளைட்டில் சென்னையிலிருந்து ஹாங்காங்க் ஏர்போர்ட்டிற்கு பயணத்தை ஆரம்பித்தேன். சுமார் 5.30 மணி நேரம் ஆகாயத்தில்  பயணம். ஜன்னலோரம் சீட் கிடைத்ததால் பயணம் ரொம்ப இனிமையாக இருந்தது. சிங்காரச் சென்னையை இரவு நேரத்தில் ஆகாயத்திலிருந்து பார்க்கும் போது, அற்புதமாக இருந்தது. சில மணிநேரத்தில் இரவு முடிந்து சூரியன் அஷ்தமனம் ஆனதும், ஜன்னலின் வழியே ஆகாயத்தின் அழகையும், இடை இடையே வந்து செல்லும் மேகக் கூட்டத்தையும், வங்கக் கடலின் பிரமாண்டத்தையும் கண் கொட்டாமல் பார்த்து கொண்டே இருந்தேன். இயற்கையின் படைப்பையும் மனிதனின் அறிவையும் எண்ணினேன். மனிதன் மட்டும் விமானத்தை கண்டு பிடிக்காவிட்டால் இவ்வளவு அற்புதங்களை காண முடியுமா? !

சுமார் 11.30 மணிக்கு(இந்திய நேரப்படி காலை 8.30) ஹாங்காங்க் ஏர்போர்ட்டிற்கு வந்து சேர்ந்ததும், இம்மிக்ரேசன் போன்ற இத்யாதி விசயங்களை முடித்தவுடன் ஏர்போர்ட் வளாகத்திற்குள்ளே இருக்க வேண்டிய கட்டாயம். ஜப்பான் ஃபிளைட் மாலை 3.20 மணிக்குத்தான்(இந்திய நேரப்படி மதியம் 12.20). அதுவரை வளாகத்தில் இருக்கும் ஷாப்பிங்க் ஷாப்களை விசிட் அடிக்கலாம் என்று நினைத்து விட்டு ஒவ்வொரு ஷாப்களையும் பார்த்தேன். ஆனால் எதையும் வாங்க முடியவில்லை. அவ்வளவு காஸ்ட்லி!. மேலும் ஹாங்காங்க் கரன்சி வேறு கையில் இல்லை. 3.30 மணி நேரத்தை எப்படி ஓட்டுவது என்று நினைக்கும் போது, ஹாங்காங்க் ஏர்போர்ட்டில் ஃப்ரி இன்டர்நெட்,  Free Wi-Fi வசதி இருந்ததை அறிந்தேன் .அப்புறம் ஒரு வழியாக 3.30 மணி நேரத்தை இன்டர்நெட்டில் கழித்தேன்.


யாராவது ஹாங்காங்க் சென்றால் இந்த வசதியை உங்கள் மொபைல் அல்லது லேப்டாப்பில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Free Wi-Fi SSID :  HKAirport Free WiFi




மதியம் 2.45 மணிக்கு கேத்தே ஃபசிஃபிக் ஃபிளைட் வந்து விட்டது. மீண்டும் கேத்தே ஃபசிஃபிக் ஃபிளைட்டில் ஹாங்காங்க் டூ ஜப்பான் பயணத்தை ஆரம்பித்தேன்.  மீண்டும் 5 மணி நேர பயணம். மதிய நேரமானதால் வானம் ரொம்பவும் தெளிவாக இருந்தது. அசதியில் தூங்கிக் கொண்டிருந்த போது, அழகான ஒரு ஏர் ஹோஸ்டஸ் பெண் மென்மையான குரலில் எனக்கான உணவை சொல்லிக் கொண்டே தந்தார். உணவு நன்றாக இருந்தது. உணவை விட ஆரஞ்சு ஜூஸ் ரொம்ப நன்றாக இருந்தது. இரண்டு முறை கேட்டு வாங்கினேன்.

சிறிது நேரம் தூக்கம். சிறிது நேரம் சௌத் சைனா கடலழகை ஜன்னலிருந்து பார்த்தவாறு இருந்தேன். சுமார் இரவு 8 மணிக்கு(இந்திய நேரப்படி மாலை 4.15)
ஜப்பானின் டோக்கியோ ஏர்போர்ட்டை வந்தடைந்தேன். ஏர்போர்ட்டை விட்டு வெளி வந்தபின் குளிர ஆரம்பித்தது. அதன் பின்பு ஒரு நாள் ஓய்வு எடுத்தேன்.
பின்னர்... அலுவலகம்...வேலை.. என்று நாட்கள் கழிந்து விட்டது. முதல் இரண்டு நாட்கள், குளிரின் காரணத்தினாலும், குளிர்ந்த நீரைக் குடித்ததாலும் த்ரோட் பெயின் வந்து விட்டது. மாத்திரை எடுத்துக் கொண்ட பின்னர் ஒரு நாளில் சரியாகி விட்டது. ஆனால் ஜலதோசம் மட்டும் இன்னமும் விடவே இல்லை. மாத்திரை சாப்பிட்டும் பலனில்லை. எனவே ஜப்பானுக்கு பயணம் செய்பவர்கள் , வரும் போது பயணம் செய்யும் மாதத்தில் ஜப்பானின் க்ளைமேட்(Climate) பற்றிய அறிவை வைத்துக் கொண்டு அதற்கேற்றவாறு
பொருட்களை லக்கேஜ் பேக்கில் வைத்துக் கொள்ளுங்கள். 


ஜப்பானின் நான்கு பருவங்கள்:

வசந்த காலப் பருவம் - மார்ச், ஏப்ரல் மற்றும் மே
கோடை காலப் பருவம் - ஜூன், ஜூலை, மற்றும் ஆகஸ்ட்
இலையுதிர் காலப் பருவம் - செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர்
குளிர்காலப் பருவம் - டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி


இந்த மாதம் இலையுதிர் மாதம். இருப்பினும் குளிர் தினமும் 10 டிகிரி இருக்கிறது. வெயில் அடித்தாலும் குளிர்கிறது. கையில் க்ளவுஸ் இல்லாமல் வீட்டை விட்டு சென்றால் நிச்சயம் குளிரில் கை விறைத்து விடும். அடிக்கடி நானும் இதனால் அவதிப்பட்டிருக்கிறேன்.
 
நாமெல்லாம் ஆச்சர்யப்படும் வகையில் இங்கு நிறைய விசயங்கள் இருக்கின்றன. எவ்வளவு பெரிய நில நடுக்கம் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் தாங்கும் வகையில் ஒவ்வொரு வீடும் கட்டப் பட்டிருக்கிறது. முக்கியமாக ஒவ்வொரு வீடும் மரப் பலகைகளால் கட்டப்பட்டுள்ளது. எவ்வளவு சிறிய வீடாக இருந்தாலும் உட்புறத்தில் அழகாக இண்டீரியர் டிசைன் செய்திருக்கிறார்கள். அலுவலகங்களும் எவ்வளவு ஃப்ளோரில் கட்டப்பட்டு இருந்தாலும் நிலநடுக்கத்தை தாங்கும் வண்ணம் டெக்னாலஜியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 


 இதுவரை நான் இருக்கும் வீட்டினுள் மூன்று முறை நிலநடுக்கத்தை உணர்ந்தேன். அலுவலகத்தில் ஒருமுறை உணர்ந்தேன். நிலநடுக்கம் சுமார் 5 அல்லது 10 நிமிடங்கள் வரை இதுவரை நீடித்திருந்தது. முதல் முறை உணர்ந்த போது சிறிது மனக் கலக்கம் இருந்தது. காரணம் தூங்கிக் கொண்டிருந்த போது வந்தது. இப்போது பயம் போய் விட்டது. இங்கு வருவது போல் சுமார் 5 நிமிடங்கள் நில நடுக்கம் நம்மூரில் வந்தால் நிச்சயம் பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த விசயத்தில் நமது இந்தியாவுக்கு எந்த ஆபத்துமில்லை.

இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா கி.பி 1945 வருடம், ஆகஸ்டு மாதம் 06-ந்தேதி ஹிரோஷிமாவிலும், 09-ந்தேதி நாகஷாகியிலும் போட்ட இரண்டு அணு குண்டுகளால் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தாலும், அந்த இரண்டு குண்டுகளை வாங்கிக் கொண்ட ஜப்பான் பூமி இன்னமும் வலுவில்லாமல் தான் இருக்கிறது. அந்த இரண்டு குண்டுகள் தான் வாரத்திற்கு ஒருமுறை இங்கு நிலநடுக்கத்தை தந்து கொண்டிருக்கிறது. ஏதேனும் ஒருமுறை சுனாமி, ரேடியேசன் போன்ற அதி பயங்கர விளைவுகளை ஏற்படுத்தியும் மக்களைப் பயப்பட வைத்துக் கொண்டிருக்கிறது.

ஜப்பானிய மக்களின் அறிவையும் அவர்களின் வாழ்க்கை முறையும் நிச்சயம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நான் பார்த்தவரை ஜப்பானிய மக்கள் தன்னைச் சுற்றியிருக்கும் நபர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுப்பதில்லை. ரயிலில் பயணம் செய்யும் போதும், நிறைய மக்கள் கூடும் இடங்களிலும் இதனை நன்கு கவனித்திருக்கிறேன். ஜலதோஷம்,இருமல் வந்தால் கூட மற்றவர்களை பாதித்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் மாஸ்க் போட்டுக் கொள்கிறார்கள். இவர்களைப் பார்க்கும் போது, நம் இந்திய மக்களின் நடவடிக்கைகளை எண்ணிக் கொண்டேன். நிச்சயம் நாம் ஜப்பானிய மக்களிடம் இந்த நல்ல விசயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்புறம் நான் மிகவும் ஆச்சர்யப்பட்ட விசயம் யாரும் டிராஃபிக் சிக்னல்களை மீறுவதில்லை. அவசரப்பட்டுக் கொண்டு , பரபரப்பாகவும் ரோட்டில் செல்வதில்லை. எப்பவும் அவர்களிடத்தில் ஒரு நிதானம் இருக்கிறது. குறுகலான ரோட்டில் நாம் செல்லும் போது நம் நேரெதிரில் நடந்து வருபவர்கள் இடிக்காமல் வந்தாலும், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு நம்மை கடந்து செல்கின்றனர்.


மேலும் இங்கு ஆச்சர்யப்பட்ட விசயம். நோ ஃபொல்யூசன்(No Pollution). அதற்கு காரணமாக இருக்கும் ஜப்பான் அரசு நிர்வாகமும், அதற்கேற்றவாறு நடந்து கொள்ளும் மக்களும் நிச்சயம் பாராட்டப் பட வேண்டியவர்கள்.

இந்த மக்களைப் பார்க்கும் போது நம் இந்திய நாட்டின் நிலமையை நினைத்துப் பார்த்தேன். இனி வரும் காலங்களில், நம் இந்தியா நன்றாக முன்னேற வேண்டுமெனில் ஊழலில்லா அரசு நிர்வாகமும், சுயநலம் இல்லாது சமூக நலன் கொண்ட மக்கள் தான் வேண்டும். அது நடக்குமா?????

சரி விசயத்துக்கு  வருவோம். ஜப்பானில் இருக்கும் விசயங்களை அவ்வப் போது ஒவ்வொரு பதிவிலும் எழுதுகிறேன். இப்போது எனது இன்றைய நிகழ்வைப் பற்றி எழுதுகிறேன். ஜப்பானில் பாப்புலரான டோக்கியோ ஸ்கை டவரைப் பார்க்க நண்பர்களுடன் சென்றிருந்தேன்.


உலகிலேயே மிகவும் உயரமாக இருக்கும் டவர்களில் இரண்டாவது இடத்தில் இந்த ஸ்கை டவர் இருக்கிறது(முதல் இடத்தில் சவூதி அரேபியா கிங்கடம் டவர்). சுமார் 630 அடி உயரம் வரை டவர் நீள்கிறது. 31 ஃப்ளோர் வரை மட்டும் தான் இதனுள் செல்ல அனுமதிக்கின்றனர்.

                    

டவர் இருக்கும் இடமான -க்கு சென்றவுடன் குளிர் கையை விறைக்க வைத்து விட்டது. குளிர் காற்று வேறு இதமாக இருந்தது. நல்ல கூட்டம். எங்களைச் சுற்றி ஜப்பானிய மக்கள் விதவிதமான உடைகளுடன் அலங்காரத்துடன் நடந்து கொண்டிருந்தனர்.  சிறிது தூரத்தில் ஸ்மோக்கிங்க் ஜோன்(Smoking Zone) இருந்தது. அங்கு நிறைய ஆண்களும் பெண்களூம் சரி சமமாக தம்மடித்துக் கொண்டிருந்தனர். ஷ்டைலாக தம்மடிக்கும் பெண்களின் செய்ககளை 5 நிமிடம் பார்த்துக் கொண்டே இருந்தேன். என்னை நினைத்துக் கொண்டேன். கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. ஒரு தம் கூட அடிக்காமல் இருக்கிறேனே?!என்னக் கொடுமை சார் இது?

ஜப்பானில் உள்ள இன்னொரு நல்ல விசயம். நம்மூரில், புகை பிடிப்பவர்கள், அவர்கள் விடும் புகை மற்றவர்களயும் பாதிக்கும் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கிறதா? நிச்சயம் இல்லை. ஆனால் இங்கோ ஒவ்வோரு இடத்திலும் புகை பிடிப்பதற்கென்று ஒரு ஹாலை ஒதுக்கி வைத்திருக்கின்றனர். எனவே புகை பிடிப்பவர்களால் மற்றவர்களுக்கு சிறிதளவும் பாதிப்பில்லை. எப்போது வரும் இந்தப் பழக்கம் நம் இந்தியாவில்???

                          

அப்புறம் ஸ்கை ட்ரீ அருகில் உள்ள இடத்தில் 6-வது ஃப்ளோரில் அமரா இந்திய ரெஸ்டாரெண்ட் இருந்தது. சுவையான பிரியாணி நம்ம ஊரு டேஸ்டிலேயே கிடைத்தது. விலை கொஞ்சம் காஸ்ட்லி.  இருந்தாலும் நம்மூர் பிரியாணி ஜப்பானில் கிடைப்பதே பெரிய விசயம். அதனால் வாங்கி சாப்பிட்டோம். ஜப்பானுக்கு  வந்து ஸ்கை ட்ரீ பார்க்க வருபவர்கள் இந்த ரெஸ்டாரெண்டுக்கும் சென்று வாருங்கள்.

                             

சாப்பிட்டு முடித்து விட்டு வெளியே வந்து கொஞ்சம் பர்சேஸ் செய்தோம். இரவு நேரமாகி விட்டதால் கொஞ்ச நேரம் இரவு நேர ஸ்கை ட்ரீ-யைப் பார்த்து விட்டு  வீட்டுக்கு வந்து விட்டோம். இனி அடுத்த பதிவில் எனது அடுத்த பயணத்தைப் பற்றி எழுதுகிறேன்...

*********************************************************************************